20 கோடி பதிவுகளைத் தாண்டியது விண்டோஸ் 10

K.D.D.

11JAN
2016 
ஒரு சில வசதிக் குறைவுகள் மற்றும் வர்த்தக ரீதியான பயன்பாட்டில் சில குறைபாடுகள் என விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பெயர் எடுத்திருந்தாலும், சென்ற மாதம், இந்த சிஸ்டம் பதியப்பட்ட சாதனங்களின் எண்ணிக்கை 20 கோடியைத் தாண்டியுள்ளது. இது ஒரு பெரிய சாதனையாகும். Winbeta.org என்ற இணைய தளம் இந்த தகவலைத் தந்துள்ளது. ஐந்து மாதங்களில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக, 4 கோடி சாதனங்களில், விண்டோஸ் 10 குடியேறியுள்ளது.
ஜூலையில் வெளியான பின்னர், அக்டோபரில், அதாவது மூன்று மாதங்களில், விண்டோஸ் 10, 12 கோடி சாதனங்களில் இயங்கியது. தொடர்ந்து அதே வேகத்தில் இயங்கி, 20 கோடி என்ற எண்ணிக்கையைத் தொட்டுள்ளது. இப்படியே சென்றால், ஜூலை 2017ல், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இலக்கான நூறு கோடி என்ற எண்ணிக்கை எட்டப்பட்டுவிடும் என்றே தெரிகிறது.
நெட்மார்க்கட் ஷேர் (Netmarketshare) என்ற அமைப்பின் ஆய்வில், ஆப்பரேட்டிங் சிஸ்டம் சந்தையில், விண்டோஸ் 10, 9% இடத்தைப் பிடித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. விண்டோஸ் 7 சிஸ்டம் 56% இடத்தினையும், விண்டோஸ் 8.1, 11% இடத்தினையும் கொண்டுள்ளது. இதிலிருந்து இன்னும் பெரும்பாலானவர்கள், தங்கள் சிஸ்டத்தினை அப்கிரேட் செய்து கொள்ள விருப்பமில்லாதவர்களாக இருக்கிறார்கள் என்ற உண்மை தெரிய வந்துள்ளது.
சென்ற நவம்பர் மாதம், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மைக்ரோசாப்ட் வெளியிட்ட முதல் அப்டேட் வந்த பின்னர், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறியவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. பல பயனாளர்கள், புதிய சிஸ்டம் வந்த பின்னர், அதற்கான அடுத்த அப்டேட் வரட்டும் என்றே காத்திருந்தது இதிலிருந்து தெரிய வந்துள்ளது. அதற்கேற்றார் போல், மைக்ரோசாப்ட் நிறுவனமும், நவம்பர் அப்டேட் பைல் மூலம், பல சிக்கல்களுக்குத் தீர்வினையும், பல வசதிகளை எளிமையாகவும் ஆக்கியது. 

Share this

Related Posts

Previous
Next Post »