எட்டு இந்திய மொழிகளில் ஹைக் மெசஞ்சர்....


K.D.D.

11HAN
2016 
இந்தியாவில் உருவான மெசேஜ் செயலியான ஹைக் (Hike Messenger) இனி எட்டு இந்திய மொழிகளில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான செயலி அண்மையில் வெளியானது. தமிழ், இந்தி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில், ஹைக் மெசஞ்சர் வழியாக செய்திகளை அனுப்பலாம். எனவே, ஆங்கிலம் தெரியாததால், இதனைப் பயன்படுத்துவதில் சிக்கல்களை எதிர் கொண்டவர்கள், தற்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டு, தங்கள் மொழிகளிலேயே டெக்ஸ்ட் அனுப்ப இயலும். ஒருவர் தன் தாய் மொழியில் தான் தன் எண்ணங்களைச் சிறப்பாகக் கூற முடியும் என்ற அடிப்படையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய மொழிகளில் டெக்ஸ்ட் அனுப்பும் வசதி தரப்பட்டுள்ளதால், இணையப் பயன்பாடு இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மொழிகளில் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு 47% அதிகரித்து வருகிறது. சென்ற ஜூன் மாதம், இது 12.70 கோடியாக இருந்தது. கிராமப் புறங்களில், ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரிப்பும் இதற்கு ஒரு காரணமாகும். 
இந்திய மொழி பயன்பாடு நிச்சயம் ஒரு சாதனை மைல் கல்லாய் அமையும். ஏனென்றால், ஆங்கிலம் அறியாத இந்தியப் பயனாளர்கள் 88% ஆக உள்ளனர். 
தற்போது தரப்பட்டிருக்கும் ஹைக் அப்ளிகேஷன் மூலம், ஸ்மார்ட் போனில், நாம் விரும்பும் இந்திய மொழியைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். இதில் தரப்படும் பன்மொழி கீ போர்ட் மூலம், ஆங்கிலம் உட்பட 9 மொழிகளில் டெக்ஸ்ட் அமைக்கலாம். இந்த ஒன்பது மொழிகளுக்காக எந்த நிலையிலும் மாற்றிக் கொள்ளலாம். எனவே, வேடிக்கையாகவும் நம் டெக்ஸ்ட்டை அமைக்கலாம். 
இந்த கீ போர்டில், முன் கூட்டியே அமைக்க இருக்கும் டெக்ஸ்ட்டினைக் கூறும் வசதி (predictive text) தரப்பட்டுள்ளது. இதற்கென செயற்கை நுண்ணறிவுத் திறன் தொழில் நுட்பம் இதில் பயன்படுத்தப் படுகிறது. இதனால், டெக்ஸ்ட் அமைப்பதில் குறைவான நேரமே செலவாகும். 
சென்ற செப்டம்பர் வரை, ஹைக் பயனாளர்களின் எண்ணிக்கை 7 கோடியைத் தாண்டிய நிலையில் இருந்தது. இந்தியாவில், அதிகம் பயன்படுத்தப்படும் இலவச டெக்ஸ்ட் மெசேஜ் அப்ளிகேஷன்களில், ஹைக் இரண்டாவது இடத்தைக் கொண்டுள்ளது. ஐ.ஓ.எஸ்., ஆண்ட்ராய்ட், விண்டோஸ் மற்றும் பிளாக் பெரி ஆகிய ஸ்மார்ட் போன்களில் இது இயங்கும் தன்மை கொண்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Share this

Related Posts

Previous
Next Post »