சாதா திரையைத் தொடு உணர் திரையாக்க....


K.D.D.

11JAN
2016 
ஸ்மார்ட் போன்களைப் பின்பற்றி, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, தொடு உணர் திரை இயக்கம் கொண்டதாக அமைத்தது. விண்டோஸ் 8 சிஸ்டம் மக்களிடையே வரவேற்பினைப் பெறவில்லை என்றாலும், மக்கள் தங்கள் கம்ப்யூட்டர் மானிட்டர்கள், டச் ஸ்கிரீன் எனப்படும் தொடு உணர் திரையாக இருக்க வேண்டும் என விரும்பினார்கள். ஆனால், இந்த வகை மானிட்டர்கள் கொண்ட லேப்டாப் கம்ப்யூட்டர்களின் விலை அதிகமாக இருந்ததால், பழைய வகை மானிட்டர்கள் கொண்ட லேப்டாப் கம்ப்யூட்டர்களையே பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இவர்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த நியோ நேட் (Neonode) என்ற நிறுவனம், புதிய தொரு இணைப்பு சாதனத்தை வடிவமைத்து விற்பனைக்கு வழங்கியுள்ளது. இதனை ஏர்பார் (Air Bar) எனப் பெயரிட்டுள்ளது. இதனை யு.எஸ்.பி. போர்ட் ஒன்றில் இணைத்துப் பயன்படுத்தலாம். லேப்டாப் கம்ப்யூட்டருடன் இணைத்துப் பயன்படுத்தும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. 
இந்த சாதனம் நம் கண்களுக்குப் புலப்படாத வகையில், ஒளிக் கதிர்களை, டச் ஸ்கிரீன் அல்லாத திரைக்கு அனுப்பி, அந்த திரையை தொடு உணர் திறன் கொண்ட திரையாக மாற்றுகிறது. 2016ல் இது விற்பனைக்கு வர உள்ளது. அறிமுக விலை 49 அமெரிக்க டாலர் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல் மாடல், 15.6 அங்குல திரை கொண்ட லேப் டாப் கம்ப்யூட்டர்களுக்கென வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. 
இந்த சாதனத்தினை யு.எஸ்.பி. போர்ட்டில் இணைக்க வேண்டும். அதன் பின்னர், ஏர் பார் எனப்படும் நீண்ட வடிவிலான துண்டினை டிஸ்பிளே திரைக்குக் கீழாக இணைக்க வேண்டும். உடன், இந்த பட்டையிலிருந்து கண்களுக்குப் புலப்படாத ஒளிக் கற்றைகள் இயக்கப்பட்டு திரையை அடைகின்றன. அவை, நம் கரங்கள் திரையில் தொடும் இடங்களைக் கண்காணித்து செயல்படுகின்றன. விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 10 இயக்க முறைமைகளுடன் இந்த பார் இணைந்து செயல்படுகிறது. இதனை Force AIR தொழில் நுட்பம் என நியோ நோட் நிறுவனம் அழைக்கிறது. 
இதன் செயல்பாட்டிற்கென ஒட்டப்படும் பட்டை, லேப்டாப் கம்ப்யூட்டரை மூடும்போது சிக்கல் ஏற்படுத்தும் என்பதால், லேப்டாப் கம்ப்யூட்டரில் செயல்பட்டு முடித்தவுடன், இந்த பட்டையை நீக்கிவிட்டு, கம்ப்யூட்டரை மூட வேண்டும். 
இதன் செயல்படும் திறன் அறிய https://www.youtube.com/watch?v=p6VdbZxBoac என்ற முகவரியில் உள்ள காணொளிப் படத்தினைக் காணவும். ஜனவரியில், லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற இருக்கும் CES 2016 கண்காட்சியில், மற்ற புதிய சாதனங்களுடன், இது மக்களுக்குக் காட்டப்படும்.

Share this

Related Posts

Previous
Next Post »