வீரபத்திரருக்கு மலைக் கோவில்


32 கைகளுடன் கூடிய வீரபத்திரரை பெங்களூரு கவிப்புரம் குட்டஹள்ளியில் தரிசிக்கலாம். பிரளயகால வீரபத்திரர் என்பது இவரது பெயர். சிறிய மலையில் (குன்று) மீது இந்தக் கோவில் அமைந்துள்ளது. 
தல வரலாறு: சிவபெருமானை அழைக்காமல், பார்வதியின் தந்தை தட்சன் யாகம் நடத்தினான். அதைத் தட்டிக் கேட்ட பார்வதியையும் தட்சன் அவமதித்தான். கோபமடைந்த சிவன், தனது அம்சமாக 32 கைகளுடன் கூடிய விஸ்வரூப வீரபத்திரரை உருவாக்கி, யாக குண்டத்தை அழித்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் 32கைகளுடன் "பிரளயகால வீரபத்திரர்' சிலை வடித்து கோவில் எழுப்பப்பட்டது. காலப்போக்கில் இந்தக் கோயில் அழிந்து விட்டது. இப்பகுதியை ஆண்ட ராயராயசோழன், ஒரு புதரின் மத்தியில் பேரொளி மின்னியதைக் கண்டான். புதரை விலக்கியபோது, வீரபத்திரர் சிலையைக் கண்டான். பின், அச்சிலையை பிரதிஷ்டை செய்து மீண்டும் கோவில் எழுப்பினான்.
தேங்காய்த்துருவல் அலங்காரம்: ஒரு சிறிய மலை (குன்று) மீது அமைந்த இக்கோவிலில் உள்ள வீரபத்திரர் மழு, நாகம், சூலம், பாணம், சங்கு, சக்கரம் உட்பட 32 கைகளிலும் ஆயுதம் ஏந்தியுள்ளார். சன்னிதி எதிரில் நந்தி இருக்கிறது. உற்சவரும் 32 கரங்களுடன் காட்சி தருகிறார். அருகில் தட்சனும், அவனது மனைவி பிரசுத்தாதேவியும் இருக்கின்றனர். செவ்வாய்க்கிழமைகளில் வீரபத்திரருக்கு, ருத்ராபிஷேகம் செய்யப்படுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நாகதோஷம் உள்ளவர்கள் வீரபத்திரருக்கு துளசி, வில்வம், நாகலிங்க பூ மற்றும் எலுமிச்சை மாலை அணிவித்து, போளி நைவேத்யம் செய்கிறார்கள். கார்த்திகை மாதம் கடைசி செவ்வாயன்று, தேங்காய்த்துருவல் சாத்தி அலங்காரம் செய்யப்படும். வீரபத்திரர் இத்தலத்தில் உக்கிரமாக இருப்பதால், இவரை சாந்தப்படுத்தும் விதமாக இவ்வாறு செய்கின்றனர்.
உமா மகேஸ்வரர் சிறப்பு: சுவாமி சன்னிதி வலப்புறமுள்ள குன்றில், வீரஆஞ்சநேயர் புடைப்புச் சிற்பமாக காட்சி தருகிறார். வீரபத்திரர் சன்னிதிக்கு இடப்புறம், மடியில் பார்வதியுடன், உமாமகேஸ்வரர் காட்சி தருகிறார். நந்திதேவர், இவரது பாதத்தை பிடித்தபடியும், அருகில் விநாயகர், முருகன் வணங்கியபடி இருப்பதும் வித்தியாசமான அமைப்பு. 
இருப்பிடம்: பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் ஸ்டாண்டில் இருந்து 5 கி.மீ.,. 36, 37, 41, 43, 44, 45ம் எண் பஸ்களில், ராமகிருஷ்ண ஆஸ்ரமம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி, அருகிலுள்ள கோவிலுக்குச் சென்றுவிடலாம்.
திறப்பு நேரம்: காலை 8.00- 11.00 மணி, மாலை 6.00- 8.00 மணி. செவ்வாய், ஞாயிறன்று காலை 8.00- பகல் 1.00மணி, மாலை 6.00- 9.00 மணி.
தொலைபேசி: 080- 2661 8899.


எனது இந்த பதிவு பற்றிய உங்களின் கருத்துகளை இங்கே கொடுக்கவும். இது என்னை ஊக்கப்படுத்தவும் மேம்படுத்தவும் எனக்கு உதவும்.
நன்றி.

Share this

Related Posts

Previous
Next Post »