முத்தான முத்தல்லவோ முத்துமலை முத்தல்லவோ!


அறுபடை வீடுகளில் ஐந்தில் குன்றில் இருக்கும் முருகப் பெருமான் இன்னும் பல மலைகளையும் தனதாக்கிக் கொண்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துகடவு அருகேயுள்ள முத்துக்கவுண்டனூர் முத்துமலையில் அவர் அருள்பாலிக்கிறார். கந்தசஷ்டி மற்றும் திருக்கார்த்திகையை ஒட்டி இவரை தரிசிப்போமா!
தல வரலாறு : முருகப்பெருமான் ஒருமுறை தன் மயில் வாகனத்தில் இவ்வுலகை வலம் வந்தார். அப்போது அவரது கிரீடத்திலிருந்து முத்து ஒன்று உதிர்ந்து கீழே விழுந்து விட்டது. அதை எடுப்பதற்காக இறங்கியவர் இம்மலையில் கால் பதித்ததால், இது "முத்துமலை' என்று பெயர் பெற்றது. 
ஒருமுறை இந்த ஊரைச்சேர்ந்த ஒரு பெண்ணின் கனவில் முருகப்பெருமான் தோன்றி,"இந்த மலையில் மூன்று காரைச்செடிகள் வரிசையாக இருக்கும். அந்த இடத்தில் தான் சிலை வடிவில் இருக்கிறேன்,'' என்றார்.
இதனை அப்பெண் ஊர் மக்களிடம் தெரிவித்தும் அவர்கள் நம்பவில்லை. பின்பு, இதேபோல் தொடர்ந்து மூன்று கார்த்திகை 
தினத்திலும், பரணி நட்சத்திரத்திலும் அப்பெண்ணின் கனவில் தோன்றி முருகன் தொடர்ந்து கூறவே, அந்த பெண்ணே நேரடியாக இந்த மலைக்கு வந்து காரைச்செடிகள் இருப்பதைக்கண்டு பரவசமடைந்தார். இதன் பிறகு தான் ஊர் மக்களுக்கு நம்பிக்கை வர 
ஆரம்பித்தது. இதை தொடர்ந்து முருகனின் சக்திவேல் நடப்பட்டு கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் பூஜை செய்யப்பட்டது. அதன் பின் திருப்பணிக்குழு அமைத்து முன் மண்டபம் மற்றும் கர்ப்பக்கிரகம் கட்டி முடித்து சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சிறப்பம்சம்: கந்தசஷ்டியின் சிறப்பே வேலில் தான் இருக்கிறது. மாமரமாக உருமாறி நின்ற சூரபத்மனை தனது வேலை எய்து இரண்டாகப் பிளந்தார் முருகன். ஒரு பாகத்தை மயிலாகவும், மற்றொன்றை சேவலாகவும் மாற்றினார். இதைத்தான் "வேலிருக்க வினையில்லை, மயிலிருக்க பயமில்லை' என்பர். சக்திமிக்க வேலுடன் நிற்கும் இந்த முருகனை தரிசித்தால் நமது வினைகள் அகலும். 
கோவிலின் அருகே உள்ள புற்றில் இரவு நேரத்தில் ஒரு ஒளிக்கீற்று கிளம்புவதைக் காண்பதாக பக்தர்கள் பரவசப்படுகிறார்கள். குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமண தடை நீங்கவும், மனதிற்கு நிம்மதியும் தெம்பும் கிடைக்கவும் பக்தர்கள் இந்த முருகனை 
வழிபடுகின்றனர். மாதம் தோறும் கார்த்திகை திருவிழா சிறப்பாக நடக்கிறது. திருக்கார்த்திகை மிகமிக விசேஷம். பங்குனி உத்திர திருநாளில் தேரோட்டம் ஆகியவை நடக்கிறது. திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காவடி ஆட்டம் நடக்கும். 
இருப்பிடம்: கோயம்புத்தூர்- பொள்ளாச்சி சாலையில் கிணத்துக்கடவு உள்ளது. அங்கிருந்து 12 கி.மீ. தூரத்தில் முத்துக்கவுண்டனூர்.
நேரம் : காலை 6.30- இரவு 7.30 மணி. 
அலைபேசி: 97155 12323.

எனது இந்த பதிவு பற்றிய உங்களின் கருத்துகளை இங்கே கொடுக்கவும். இது என்னை ஊக்கப்படுத்தவும் மேம்படுத்தவும் எனக்கு உதவும்.
நன்றி.

Share this

Related Posts

Previous
Next Post »