கூகுள் பைபர் & காம் காஸ்ட் கிகாபிட் ப்ரோ 2Gbps வேகம்,,,

கூகுள் நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளாக, ”கூகுள் பைபர்” என்ற திட்டத்தின் அடிப்படையில், விநாடிக்கு 1 கிகா பிட் வேகத்தில் இணைய இணைப்பினை அமெரிக்காவில் தேர்ந்தெடுத்த சில நகரங்களில் வழங்கி வருகிறது. 2012 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கான்சஸ் நகரத்தில் அறிமுகமாகி, தற்போது 35 நகரங்களுக்கு மேல் இணைப்பினை வழங்கி வருகிறது. இதன் வேகம் விநாடிக்கு 1 கிகா பிட் அளவாகும். இந்த அளவில், இணைய இணைப்பு மற்றும் இணைய இணைப்பின் வழி டி.வி. ஒளிபரப்பு ஆகியவை தரப்படுகின்றன. 
அமெரிக்காவில், இணைய இணைப்பு வழங்கி வரும் காம் காஸ்ட் (Comcast) என்னும் நிறுவனம், தற்போது கூகுள் நிறுவனத்தின் ”கூகுள் பைபர்” போல ”கிகாபிட் ப்ரோ” (Gigabit Pro) என்ற பெயரில் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. முதன் முதலில் ஜியார்ஜியா மாநிலத்தில் உள்ள அட்லாண்டா நகரில் இது அறிமுகமாகிறது. 
இதன் அடிப்படையில், விநாடிக்கு 2 கிகா பிட்ஸ் வேகத்தில், இணைய இணைப்பு வழங்கப்படும். பைபர் இழை மூலம் வீடுகளுக்கு நேரடியாக இணைப்பு வழங்கப்படும். இந்த ஆண்டு முடிவிற்குள், அட்லாண்டா நகரில் 1 கோடியே 80 லட்சம் வீடுகளை இத்திட்டத்தின் கீழ் கொண்டு வர, காம் காஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. காம்காஸ்ட் இதற்கான கட்டணம் குறித்து எந்த அறிவிப்பும் தரவில்லை.
கூகுள் பைபர் திட்டத்தின் கீழ், மாதம் 70 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தற்போது காம் காஸ்ட் நிறுவனம் வழங்கும் இணைய இணைப்பிற்கு 505Mbps வேகத்திற்கு 400 டாலர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 
ஆனால், புதிய கிகாபிட் ப்ரோ திட்டத்தில் அந்த அளவிற்குக் கட்டணம் இருக்காதென்றும், தற்போது வீடுகளில் இணைப்பு வைத்திருப்பவர்கள், தானாகவே கிகாபிட் ப்ரோ திட்டத்திற்க்கு மாற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

Share this

Related Posts

Previous
Next Post »